செய்திகள்
வாணியம்பாடியில் முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

வேலூர், செய்யாறு, ராணிப்பேட்டை, வாணியம்பாடியில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல்

Published On 2020-02-15 10:36 IST   |   Update On 2020-02-15 11:18:00 IST
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து வேலூர், செய்யாறு, ராணிப்பேட்டை, வாணியம்பாடியில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முஸ்லீம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு வேலூர் அண்ணாசாலையில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தை முஸ்லீம்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட முஸ்லீம் நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் இரவு சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூரில் 2 இடங்களில் முஸ்லீம் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் பஸ் நிலையத்திலும் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம் செய்தனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடையில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்காடு சாலையில் உள்ள அண்ணா சிலை எதிரே முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சாலை மறியல் செய்தனர். மறியல் நீண்ட நேரம் நீடித்தது.

செய்யாறு டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

ஆரணி எம்.ஜி.ஆர். சிலை அருகே மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் கட்சியினர் உள்பட முஸ்லீம்கள் திரண்டு மறியல் செய்தனர்.

திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு சாலையில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்ததை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதேபோல் வந்தவாசியிலும் முஸ்லீம்கள் போராட்டம் செய்தனர்.

முஸ்லீம்கள் போராட்டத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News