செய்திகள்
கோப்பு படம்

அரசுக்கு வருமானத்தை நாங்கள்தான் கொடுத்து வருகிறோம் - டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் வாக்குவாதம்

Published On 2020-02-08 16:26 IST   |   Update On 2020-02-08 16:26:00 IST
ஈரோடு அருகே மதுபான விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி திடீரென உத்தரவை வெளியிட்டது. அதன்படி குவாட்டர் ரூ.10, ஆப். ரூ.20, புல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதைப்போல் பீர் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 197 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் சில கடைகள் பார் உடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் விலை உயர்வு பற்றி விவரம் தெரியாத குடிமகன்கள் கடைக்கு சென்ற போது வழக்கம் போல் பழைய விலைக்கான பணத்தைக் கொடுத்தனர்.

விலை உயர்ந்துள்ள விபரத்தை விற்பனையாளர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்த சில குடிமகன்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல டாஸ்மாக் கடைகளிலும் இதே நிலைதான் நீடித்தது. சில குடிமகன்கள் அது என்ன? எதற்கெடுத்தாலும் டாஸ்மாக் விலையை மட்டும் உயர்த்துகிறார்கள்.

எங்களைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது. முதலீடு இல்லாமல் அரசுக்கு வருமானத்தை நாங்கள்தான் கொடுத்து வருகிறோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்துவதே விற்பனையாளர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது.

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில்,

திடீரென இந்த விலை உயர்வு அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் விவரம் தெரியாமல் டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தான் வேண்டுமென்றே விலையை உயர்த்தி விற்பனை செய்கிறோம் என்று எங்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள்.

விலைப்பட்டியலை கடைக்கு முன்பாக ஒட்டியும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தகராறு செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்யவதன்று தெரியவில்லை என்றனர்.

Similar News