செய்திகள்
2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்ட காட்சி.

பாதிரியார் மீது பாலியல் புகார் கூறிய 2 ஆசிரியர்களை வகுப்பறையில் பூட்டி சிறை வைத்த மக்கள்

Published On 2020-02-04 05:04 GMT   |   Update On 2020-02-04 05:04 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே பாதிரியார் மீது பாலியல் புகார் கூறிய 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அறந்தாங்கி கிராமத்தில் புனித அந்தோணியார் உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் பணியாற்றும் பாதிரியார் மீது மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் 2 ஆசிரியர்கள் புகார் கூறினர்.

இந்த விபரம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் பாதிரியாருக்கு ஆதரவாக திரண்டனர். பின்னர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது பாதிரியார் மீது தவறான புகார் கூறிய 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஒரே நேரத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கிராமமக்களில் ஒரு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து பாதிரியார் மீது புகார் கூறிய 2 ஆசிரியர்களையும் வகுப்பறையில் பூட்டி சிறை வைத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

தகவல் அறிந்த சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்ரபிரண்டு ஜவஹர்லால், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்செல்வன், சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். சிறை வைக்கப்பட்ட ஆசிரியர்களை மீட்டனர். பின்னர் கிராம மக்களிடம் இது தொடர்பாக ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். என்றாலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பள்ளி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News