செய்திகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

ஜெயங்கொண்டம் வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம்

Published On 2020-01-02 09:50 IST   |   Update On 2020-01-02 09:50:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாக்கு எண்ணும் மையத்தில் காலை உணவு வழங்கக்கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 15 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், அப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாலையிலேயே அங்கு வந்தனர். 8 மணியளவில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டு அங்கிருந்த வாக்குப்பெட்டிகள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த பணிகள் முடிவடைந்து 8.10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட இருந்த நிலையில், அப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அதிகாலையிலேயே பணிக்கு வந்து விட்டோம். ஆனால் எங்களுக்கு காலை உணவு இதுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே உடனே உணவு வழங்க வேண்டும். அதுவரை வாக்கு எண்ணும் பணியை தொடங்க மாட்டோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் , ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உணவு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தனர்.

அதன்பிறகு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர். இதனால் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 15 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது.

Similar News