செய்திகள்
பணம் கட்டி ஏமாந்தவர்கள் அடகு கடையை முற்றுகையிட்ட காட்சி.

மதுராந்தகம் அருகே 900 பேரிடம் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 2 கோடி சுருட்டல்

Published On 2019-12-28 15:02 IST   |   Update On 2019-12-28 15:02:00 IST
மதுராந்தம் அருகே 900 பேரிடம் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடியுடன் அடகு கடைக்காரர் ராஜஸ்தான் தப்பி ஓடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே பூதூர் என்ற பகுதியில் ராம்தேவ் அடகு கடை உள்ளது. இந்த அடகு கடையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பியாராம் (வயது 48) என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த அடகு கடையில் அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிக் செல்வது வழக்கம். இதனால் ராம்தேவ் அடகு கடை அந்த பகுதியில் பிரபலமானது.

இதை பயன்படுத்தி பியாராம் அந்த பகுதி மக்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து நடத்த தொடங்கினார். தீபாவளி சீட்டு ஒரு வருடம் கட்டினால் தங்க நகை மற்றும் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன்கள் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாதம் தோறும் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை தங்கள் தகுதிக்கேற்ற வகையில் கட்டலாம் என்றும், அதற்கேற்ப தங்க நகைகளும், மளிகை கூப்பன்களும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதை நம்பி அவரிடம் அந்த பகுதி மக்கள் தீபாவளி சீட்டு கட்டினர்.

பூதூர், ஈசூர், எல்.என்.புரம், புளித்தரை கோவில், படாளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் 1300-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் தீபாவளி சீட்டு கட்டினர்.

இந்த நிலையில் தீபாவளி நெருங்கும் வேளையில் அவர் கூறியபடி வாடிக்கையாளர்களுக்கு நகை-மளிகை கூப்பன் எதுவும் கொடுக்கவில்லை.

பொது மக்கள் அடகு கடைக்கு சென்று நகை மற்றும் மளிகை கூப்பனை கேட்டனர். அதற்கு அவர் தனக்கு பண நெருக்கடி இருப்பதாகவும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் நகை மற்றும் மளிகை கூப்பன் தந்து விடுவேன் என்று உறுதியாக கூறினார்.

மேலும் அவர் தினமும் அடகு கடையை திறந்து தொழில் செய்தார். குறிப்பிட்ட காலத்தில் நகையை தந்து விடுவார் என்று பொதுமக்கள் நம்பினார்கள்.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததும் அந்த பகுதி மக்கள் அடகு கடைக்கு சென்று பியாராமிடம் தீபாவளி சீட்டு கட்டியதற்கான நகையை கேட்க தொடங்கினார்கள்.

இதையடுத்து அவர் பணம் கட்டியவர்களுக்கு நகையும், மளிகை கூப்பன்களும் வழங்கினார். 400 பேருக்கு நகையை கொடுத்து விட்டார். மற்றவர்களுக்கு அவரால் நகையை கொடுக்க முடியவில்லை. மற்றவர்களிடம் அவர் இந்த மாதம் இறுதிக்குள் கொடுத்து விடுவேன் என்று கூறி சமாளித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அடகு கடை பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் தீபாவளி சீட்டு கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மேல்வலம்பட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அவரது வீடும் பூட்டப்பட்டு கிடந்தது. அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தானுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதுபற்றி பணம் கட்டி ஏமாந்தவர்கள் படாளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 250 பேரிடம் சுமார் ரூ. 2 கோடி வரை பியாராம் சுருட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. பியாராமிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அங்கு சென்று புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து ரூ. 2 கோடி சுட்டிவிட்டு தப்பி ஓடிய பியாராமை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பியாராமிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தினமும் அவரது அடகு கடையை முற்றுகையிட்டு வருகிறார்கள்.

அவரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறியதாவது:-

பியாராம் இங்கு 7 வருடமாக அடகு கடை நடத்தி வருகிறார். அவர் கடை ஆரம்பித்த 3 வருடம் கழித்து தீபாவளி சீட்டு நடத்த தொடங்கினார். 2 வருடங்கள் தொடர்ந்து நடத்தினார்.

அப்போது பணம் கட்டிய அனைவருக்குமே நகை மற்றும் மளிகை கூப்பன் கொடுத்து விட்டார். அதனால் அவரை நாங்கள் நம்பினோம். அதன்பிறகு அவர் 2 வருடங்கள் தீபாவளி சீட்டு பிடிக்கவில்லை.

கடந்த வருடம் மீண்டும் தீபாவளி சீட்டு தொடங்கினார். அவர் நகை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் சீட்டு கட்டினோம். 1300 பேரில் 400 பேருக்கு மட்டுமே நகை கொடுத்துள்ளார். 900 பேருக்கு அவர் நகை மற்றும் மளிகை கூப்பன் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News