செய்திகள்
கொலை செய்யப்பட்ட ரேவதி

ஆம்பூர் அருகே இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடி

Published On 2019-12-26 10:36 GMT   |   Update On 2019-12-26 10:36 GMT
ஆம்பூர் அருகே இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார்.

கடந்த 18-ந்தேதி அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் ரேவதியின் உறவினர் டெய்லர் செல்வராஜ் (44). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சித்ரா(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

செல்வராஜ் ஆம்பூர் டவுனில் டெய்லர்கடை வைத்துள்ளார். சித்ரா திருப்பூரில் டெய்லராக உள்ளார். இவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரா ஊருக்கு வந்திருந்தார். கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்தனர். அப்போது ரேவதியின் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். நகைகளை விற்று கடனை அடைத்துவிட்டு உல்லாசமாக ஊர்சுற்ற முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று ரேவதியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்தனர். நகைகளை சித்ரா அவரது வீட்டின் அருகே மண்ணில் புதைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாததது போல் நடந்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.
Tags:    

Similar News