செய்திகள்
கைது

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 6 பேர் கும்பல் கைது

Published On 2019-12-16 04:49 GMT   |   Update On 2019-12-16 04:49 GMT
அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

ஆன்லைன் லாட்டரியால் விழுப்புரத்தில் நகை வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்ரீநிவாசன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மோகன்தாஸ் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன் சுருட்டி, உடையார்பாளையம், தா.பழூர் பகுதிகளில் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஜெயங்கொண்டம் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மேலக்குடியிருப்பு நடுத்தெருவைச்சேர்ந்த ராஜா (வயது 50), மேட்டுத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (50), தேவாங்கர் புதுத்தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (58), சின்னவளையம் கீழத்தெருவை சேர்ந்த ஆனந்த் (35) மற்றும் ஆண்டிமடம்-விளந்தை கிராமம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (26), சூனாபுரி கிராமம் சின்னத்துரை (58) ஆகியோர் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரிச்சீட்டு விற்று வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்களா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News