செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்- விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2019-12-12 13:26 GMT   |   Update On 2019-12-12 13:26 GMT
வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பொய்யான வாதங்களை வைத்து மக்களை திசை திருப்பும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்க கூடாது என்பதுதான் ஒரே குறிக்கோள். அதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது.

மக்கள் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. தி.மு.க. தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றதற்கு காரணம் அவர்கள் தோல்வி பயத்தினால்தான். இடைத்தேர்தலில் எப்படி தோல்வி அடைந்தார்களோ அதே போன்று உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி எதிரொலிக்கும் என்று தான் நீதிமன்றம் சென்றனர்.

தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூறியது, ஆனால் தேர்தல் நடத்தக்கூடாது என்று தி.மு.க. கூறியது. யாருக்கு மரண அடி என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்

ஸ்டாலின் பேச்சு தெளிவாக இல்லை. இந்திய குடியுரிமை சட்டம் மிகத்தெளிவாக உள்ளது. ஓட்டு வங்கிக்காக இந்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க வில்லை என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. சிறுபான்மையினரை பாதுகாக்கத்தான் இந்த சட்டம்.

இலங்கையில் நம் தமிழர்கள் மண்ணை இழந்து விடாமல் அவர்களது உரிமையை அங்கேயே நிலை நாட்ட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம். அதற்கான முழு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது

அதை திசை திருப்புவதற்காகத்தான் சிலர் குற்றச் சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இலங்கை தமிழர்களையும் சேர்த்து விட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு தமிழகத்திற்கு விரட்டி அடிக்கும். அதை அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்தப் பிரச்சினையை தவறாக பிரசாரம் செய்ய நினைத்தால் உள்ளாட்சித் தேர்தலில் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட முடிவுதான் தி.மு.க. கூட்டணிக்கு ஏற்படும். பா.ஜ.க.விற்கு மாநிலத் தலைவர் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமோக வெற்றி பெற்றதோ, அதே போன்று உள்ளாட்சித்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் அ.தி. மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News