செய்திகள்
நகை அடகுகடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள்.

திருப்போரூர் அருகே அடகு கடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி

Published On 2019-12-09 06:56 GMT   |   Update On 2019-12-09 06:56 GMT
திருப்போரூர் அருகே நகை அடகு கடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பம், திருப்போரூர் - நெல்லிக்குப்பம் சாலையில் விமல்சந்த் என்பவருக்கு சொந்தமான அடகு கடை உள்ளது.

நேற்று இரவு 8.30 மணி அளவில் விமல்சந்த் வழக்கம் போல் கடையை மூடுவதற்கு தயாரானார்.

அப்போது முகமூடி அணிந்த 3 வாலிபர்கள் ஒருவர் பின் ஒருவராக கடைக்குக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென கைத்துப்பாக்கியால் கடை உரிமையாளர் விமல்சந்த்தை மிரட்டி நகைகளை கொடுக்கும்படி கேட்டான்.

உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட விமல்சந்த் தனது காலுக்கு கீழே இருந்த அபாய அலாரத்தை ஒலிக்க செய்தார். அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் தலைதெறிக்க கடையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் அலாரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் அடகு கடை முன்பு திரண்டனர். அப்போது தான் அடகு கடைகாரரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் மிரட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து காயார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அடகு கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் நுழைவதும் பின்னர் அடகு கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதும் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே கடையில் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அலாரம் வயரை துண்டித்து பணம்-நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது கடை உரிமையாளருக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமிரா சென்சார் மூலம் குறுஞ்செய்தி வர அவர் உடனடியாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

இதனால் அப்போதே கடையில் இருந்த நகை- பணம் தப்பியது. இதே போல மற்றொரு முறை கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்த போதும் அலாரம் ஒலித்ததால் நகை-பணம் தப்பியது.

தற்போது அதே கடையில் 3-வது முறையாக கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. உரிமையாளர் சரியான நேரத்தில் அலாரத்தை ஒலிக்க செய்ததால் கடையில் இருந்த நகை-பணம் தப்பியது.
Tags:    

Similar News