செய்திகள்
மழை (கோப்புப்படம்)

விடிய, விடிய கனமழை- சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2019-11-30 10:21 IST   |   Update On 2019-11-30 10:21:00 IST
சிவகங்கையில் இன்று காலை மழை நீடித்ததையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வந்தது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் நேற்று காலையில் அவ்வப்போது தூரல்மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மாலை முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 3 மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

இன்று காலை மழை நீடித்ததையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ராமேசுவரம் கோவிலில் மழைநீர் புகுந்தது. அதனை உடனே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேயனாறு, அய்யனார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் பல ஆலைகள் மூடப்பட்டன.

மதுரையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இன்று காலையும் மழை நீடித்தது.

Similar News