செய்திகள்
நீர் முழ்கி பலி

கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Published On 2019-11-25 05:18 GMT   |   Update On 2019-11-25 05:18 GMT
கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த கொடிவேரி அணைக்கு வந்து பவானி ஆற்றுக்கு செல்கிறது.

கடந்த ஒரு வாரமாக பவானி சாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஒரு வாரத்துக்கு பிறகு பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.

இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு கொடிவேரி அணையில் குளிக்க தடை நீங்கியது. இதனால் நேற்று விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர், குன்னூர் மாவட்ட சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அணையில் இருந்து விழும் தண்ணீரை ரசித்த பயணிகள் பலர் அணையில் இறங்கி குளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்ணார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20), சுதீப் (15) ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலருடன் கொடிவேரி அணைக்கு வந்தனர்.

விக்னேஷ் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டும், சதீஸ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களும், சக நண்பர்களும் கொடிவேரி அணையில் இறங்கி குளித்தனர். அப்போது சுழல் நிறைந்த பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதில் விக்னேஷ், சுதீப் ஆகியோர் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு இருவரது உடல்களையும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மாணவர்களின் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு இன்று உடல்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.

கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொடிவேரி அணைக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி அணையில் போலீசார் பாதுனகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடத்தூர், டி.என். பாளையம் போலீசார் அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆழமான பகுதிக்கும் சுழல் நிறைந்த பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் சென்று விடாத வகையில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் போலீசார் ஒலிபெருக்கி மூலமும் எச்சரித்தப்படி உள்ளனர்.

Tags:    

Similar News