செய்திகள்
குழந்தையின் தாய் பவித்ரா.

வாலாஜாவில் அழுத குழந்தை துணியால் அமுக்கி கொலை- தாய் கைது

Published On 2019-11-23 13:37 IST   |   Update On 2019-11-23 13:37:00 IST
வேலூர் மாவட்டம் வாலாஜாவில் அழுது கொண்டிருந்த குழந்தையை துணியால் அமுக்கி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:

வேலூர் மாவட்டம் வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் மனைவி அம்மு என்கிற பவித்ரா (வயது 22). இவரது மகள்கள் ரம்யா (3), மவுலிகா (1½). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பவித்ரா குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று இரவு குழந்தை மவுலிகா அழுதுகொண்டே இருந்தது. அதனை சமாதானம் செய்ய பவித்ரா முயன்றுள்ளார். அழுகை நிறுத்தாததால் துணியால் குழந்தையின் வாயை அமுக்கியுள்ளார்.

அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மவுலிகா மயங்கியது. இதனால் திடுக்கிட்ட பவித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் அதியமான் இது பற்றி வாலாஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர்.

Similar News