செய்திகள்
கோவில் கதவுகள் 11 பூட்டுக்களால் பூட்டப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

Published On 2019-11-11 09:51 IST   |   Update On 2019-11-11 09:51:00 IST
அரியலூர் அருகே திருமணம் நடத்துவதற்கு எதித்து தெரிவித்து ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு பூட்டு போட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

நேற்று நமங்குணம் கிராமத்தை சேர்ந்த அருண் ஸ்டாலின்-திவ்யா ஆகியோருக்கு அந்த கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்திருந்தனர். நேற்று காலை மணமகன்-மணமகளுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் உறவினர்களும் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்று பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. யாரும் கதவை திறக்க முடியாத வகையில் இரும்பு சங்கிலியால் 11 பூட்டுக்களை போட்டு பிணைத்து வைத்திருந்தனர். இதைப்பார்த்த மணமகன்-மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பூட்டு போட்டது யாரென்று விசாரிக்கையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் என தெரியவந்தது. முகூர்த்த நேரம் முடிவதற்குள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இரு வீட்டாரது உறவினர்களும் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருமணம் நடத்த இருந்த தரப்பை சேர்ந்தவர்கள், நாங்கள் சீனிவாச பெருமாள் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கே முன்பே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம். எனவே நாங்கள் திருமணம் நடத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.

கோவிலுக்கு பூட்டு போட்ட தரப்பை சேர்ந்தவர்கள், சீனிவாச பெருமாள் கோவில் எங்களது தெருவில் உள்ளது. எங்களது முன்னோர்கள் எங்களுக்காக கட்டியுள்ளனர் என்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினரிடமும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடமிருந்து போலீசார் சாவிகளை வாங்கி திறந்தனர். 11 பூட்டுக்களை போட்டதில் அதில் 2 பூட்டுகளுக்கான சாவி இல்லை. அந்த பூட்டுக்களை போலீசார் உடைத்து கதவை திறந்தனர்.

அதன்பிறகு அங்கு அருண் ஸ்டாலின்- திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியதால் போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News