செய்திகள்
முருகன் - நளினி

வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு நளினி-முருகன் சந்திப்பு

Published On 2019-11-09 08:46 GMT   |   Update On 2019-11-09 08:46 GMT
வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று நளினி முருகன் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியுடன் சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டது.

தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.

உண்ணாவிரதத்தை கைவிட கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஜெயிலில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று நளினியை சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு இன்று காலை கலால் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகனை வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரை சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Tags:    

Similar News