செய்திகள்
கேஎஸ் அழகிரி

மோடி அரசு பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-11-09 04:10 GMT   |   Update On 2019-11-09 04:10 GMT
பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியா மிகப்பெரிய நாடு. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஒன்று படுத்தி பார்க்க வேண்டும். பிளவுப்படுத்தி பார்க்கக் கூடாது. பா.ஜ.க. எனக்கு காவி சாயம் பூச நினைக்கிறது. எனக்கு மட்டுமல்ல, திருவள்ளுவருக்கே காவி சாயம் பூச நினைக்கின்றது என ரஜினி அறிவித்திருக்கிறார். அவர் அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.

இஸ்லாமியருக்கு குரான் நூல் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு பைபிள் நூல் உள்ளது. இந்துக்களுக்கு பகவத் கீதை உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட நூல் திருக்குறள். அதனால் தான் உலகப்பொதுமறை என போற்றப்படுகிறது. அதை எழுதிய திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது என்ன நியாயம். இந்த நாட்டை காக்க ஒரு இயக்கத்தில் காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றால் அது காங்கிரஸ் கட்சி இயக்கம்தான்.

ஒரு நாட்டின் பிரதமருக்கு விவசாயம், பொருளாதாரம் தெரிய வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. காமராஜர் படிக்காதவர், பள்ளிக்கூடம் செல்லாதவர். நாடு முழுவதும் 12 ஆயிரம் கல்வி கூடங்கள் திறந்தவர். ஆசிரியர் பயிற்சி இல்லாத காலத்தில் 10-ம் வகுப்பு படித்த 10 ஆயிரம் பேர்களை ஆசிரியர்களாக நியமித்தார். பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை தந்தவர். இதுபோல் நல்ல திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்தது உண்டா?.

1000, 500 ரூபாய் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. இதனால் நாட்டிற்கு என்ன நன்மை, மக்களுக்கு என்ன பயன். குடிசையில் இருப்பவர்களை குளத்திற்கு அழைத்து சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்த்து தினசரி ஊதியம் வழங்கப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டம். இதுபோல் ஒரு நல்ல திட்டத்தை பா.ஜ.க. அரசு செய்தது உண்டா?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என கருதி குறைந்தது 5 சதவீதம், அதிகமாக 18 சதவீதம் என அறிவித்தது. ஆனால் மோடி அரசோ ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்தது. இந்திய தேசத்தை பிளவுப்படுத்த நினைக்கிறது பா.ஜ.க. அது ஒருபோதும் நடக்காது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கிகளில் வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இதனால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மோடி அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி ஒரு தவறான கூட்டணியாகும். நாங்கள் பலம் வாய்ந்த கூட்டணி. அதனால் தான் 31 எம்.பி.க்களை பெற்றிருக்கிறோம். எங்கள் கூட்டணி தொடரும். உழைத்தால்தான் உணவு கிடைக்கும். தேர்தல் நேரத்தில் தேர்தல் பணியை சிறப்பாக செய்தால் தான் வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை அமர செய்ய வேண்டும். அதற்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News