செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

ஆசிரியர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 28 பவுன் நகை கொள்ளை

Published On 2019-11-07 15:06 IST   |   Update On 2019-11-07 15:06:00 IST
தனியார் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அவரது மனைவி மற்றும் மகள்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் காட்பாடியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

காட்பாடி செங்குட்டை சி.எம் ஜான் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 52). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு அவரது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.15 மணிக்கு 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். சத்தம்கேட்டு கண்விழித்த முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை கும்பல் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

மேலும் 4 பேரையும் கயிறால் கட்டிப்போட்டு வாயில் சத்தம்போட முடியாதபடி துணியை வைத்து அமுக்கினர். இதனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

பின்னர் கும்பல் வீட்டில் இருந்த 28 பவுன் நகை ரூ.17 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முத்துவின் மோட்டார் சைக்கிளையும் கும்பல் ஓட்டிச் சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் கட்டி போட்டதால் விடிய விடிய முத்து மற்றும் அவரது மனைவி மகள்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

இன்று காலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 பேரும் கயிறால் கட்டப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். கட்டுகளை அவிழ்த்து மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.

இதுகுறித்து முத்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.கொள்ளையர்கள் 4 பேரும் முகமூடி எதுவும் அணியவில்லை. அவர்கள் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் காட்பாடியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

செங்குட்டை பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News