செய்திகள்
கைதான சிவகுமார்

தொடர்ந்து காதலிக்க மறுப்பு- காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2019-10-24 10:06 IST   |   Update On 2019-10-24 10:06:00 IST
சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த காதலியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் பட்டரமங்கலம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30). பேப்பர் மில் ஒன்றில் ஊழியராக பணிபுரிகிறார்.

அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் மீது வாலிபர் சிவகுமாருக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

முதலில் அவரை காதலித்த அந்த பெண் பிறகு வாலிபரின் நடவடிக்கை பிடிக்காமல் காதலிப்பதை கைவிட்டார்.

அந்த பெண்ணை தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும், காதலிக்கும்படியும் சிவகுமார் வலியுறுத்தினார்.

ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்ததோடு தன்னுடன் வந்து பேச வேண்டாம் எனவும் கண்டித்தார். இந்நிலையில் வேலைக்கு போக சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற அந்த இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிவக்குமார் “என்னை காதலிக்காவிட்டால் உன்னை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விடுவேன்” என மிரட்டினாராம்.

இதனால் பயந்து போன இளம்பெண் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த பாய்ந்தார். அந்த பெண் விலகி கொள்ளவே பெண்ணின் இடது கையில் கத்தி குத்து விழுந்தது. இதனால் வலியால் அவர் அலறினார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசாரும் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர். இளம்பெண்ணை கத்தியால் குத்திய சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பெண் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News