செய்திகள்
கடலூரில் மழைபெய்ததால் பள்ளிக்கு குடைபிடித்த படி செல்லும் மாணவிகளை படத்தில் காணலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்- கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை

Published On 2019-10-21 05:27 GMT   |   Update On 2019-10-21 05:27 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
விருத்தாசலம்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருத்தாசலத்தில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. மழை நீருடன் சாக்கடையும் கலந்து நிற்பதால் பயணிகள் அவதிப்பட்டனர். செம்பலாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சித்தேரிக்குப்பம் மற்றும் அந்த வழியாக செல்லும் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதே போல கம்மாபுரம், மங்கலம் பேட்டை, ஆலடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்தது.

பண்ருட்டி, திருவதிகை, எல்.என்.புரம், அண்ணாகிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை நீடித்து வருகிறது.

கடலூர் நகர் பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்தது. இன்று 6-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குடைபிடித்த படி சென்றனர். திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், தூக்கணாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்து வருகிறது

கன மழையால் கடலூர் சித்தூர் சாலை சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

சிதம்பரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 51.90 மழை பதிவாகி உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்து உள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிதம்பரம்-51.90, மே.மாத்தூர்-45, பெலாந்துறை-4.80, வேப்பூர்-38, காட்டுமைலூர்-36, கலெக்டர் அலுவலகம்-29.60, குப்பாநத்தம்-29.40, விருத்தாசலம்- 25.40, வானமாதேவி- 25, குடிதாங்கி-24.90, குறிஞ்சிப்பாடி-24, அண்ணாமலை நகர் - 21,60, லால்பேட்டை-21, கடலூர் -18.90, பண்ருட்டி-17, காட்டு மன்னார்கோவில்-16.30, புவனகிரி-16, ஸ்ரீமுஷ்ணம் -11.10, கொத்த வாச்சேரி-9, வடகுத்து-8, சேத்தியா தோப்பு-5, லக்கூர்-4.20, தொழுதூர்-4, பரங்கிப்பேட்டை-3, கீழச்செருவாய்-2 மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 527.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News