செய்திகள்
கோப்புப்படம்

மாமல்லபுரத்துக்கு வெளியே அரசு பஸ்கள் நிறுத்தப்படும்

Published On 2019-10-09 12:07 IST   |   Update On 2019-10-09 12:07:00 IST
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசு பஸ்கள் வர தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு 147 பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதே போல் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 90 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த அரசு பஸ்கள் இ.சி.ஆர். சாலையில் சென்று வருகின்றன.

அரசு பஸ்கள் அனைத்தும் பூஞ்சேரியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். இதற்காக அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.

இதனால் மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசு பஸ்கள் செல்ல முடியாது. இந்த தடை சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து செல்லும் வரை அமலில் இருக்கும்.

புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் மாமல்லபுரம் அருகே இ.சி.ஆர். சாலையை தவிர்த்து மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மாற்று பாதையில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மாமல்லபுரம் நகருக்குள் வராமல் மாற்று பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News