செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் எண்ணியதை படத்தில் காணலாம்.

வேலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.3½ லட்சம் சிக்கியது

Published On 2019-09-13 05:33 GMT   |   Update On 2019-09-13 05:33 GMT
வேலூர் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் வேலப்பாடியில் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு இணை பதிவாளராக சிவலங்கம் பணியாற்றி வருகிறார். மேலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் சங்கங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இடைத் தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத் தரகர்களின் நடமாட்டத்தை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உள்பட 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 6 மணியளவில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீரென சென்றனர். அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே உள்ளவர்கள் உள்ளே வராதபடியும் பார்த்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இணை பதிவாளர் அறை, அலுவலர்களின் அறை, கழிவறை, பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், மேசையின் அடியில் என பலப்பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கழிவறையில் மற்றும் பீரோவின் அடியில் என தூக்கி வீசப்பட்ட கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது.

இதுதொடர்பாக இணை பதிவாளர் சிவலிங்கம், அதிகாரிகள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணி நேரம் இரவு 11 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இன்று காலையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News