செய்திகள்
பெட்ரோல் பங்கில் உள்ள தீயணைக்கும் சிலிண்டரை கொண்டு தீயை அணைத்தனர்.

வாணியம்பாடியில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2019-09-13 09:34 IST   |   Update On 2019-09-13 09:34:00 IST
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெட்ரோல் பங்க் அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சை பாஸ்கர் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள் தீயணைக்கும் சிலிண்டரை எடுத்து வந்து தீயை அணைத்தனர். தீயை உடனடியாக அணைக்காமல் விட்டிருந்தால் அருகிலிருந்த பெட்ரோல் பங்க்கிலும் பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் என்ஜின் மற்றும் பஸ்சின் முன்புற பகுதியில் தொடர்ந்து புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து பஸ்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் கட்டாயம் வைக்க வேண்டும். ஆனால் விபத்து நடந்த பஸ்சில் இதுபோன்று உபகரணங்கள் ஏதும் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பஸ் உள்ளிட்ட வாகனங்களை முறையாக ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News