செய்திகள்
போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் அருகே பெண் கொலை- கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

Published On 2019-09-07 12:19 IST   |   Update On 2019-09-07 12:19:00 IST
காஞ்சிபுரம் அருகே கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த காவிதண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி கோமதி (32). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் கோமதி அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அழைத்து வருவது வழக்கம்.

கடந்த 5-ந் தேதி மாலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கோமதி இரவு 9 மணிவரை வீடு திரும்பவில்லை. உடனடியாக கணவர் ஜெயபால் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

அப்போது கிராமத்தில் உள்ள ஏரி வரத்து கால்வாய் அருகே கோமதி நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பந்தமாக சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை சம்பந்தமாக கோமதியின் கணவர் ஜெயபால் மற்றும் அவரது அண்ணன், உறவினர்களை நேற்று இரவு முதல் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்விரோதம் காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டாரா, சொத்து தகராறா? தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து கூறிய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கொலை பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஓரிருநாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என தெரிவித்தனர்.

Similar News