அத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் சேதுராயர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆக.17-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் கோயிலை சுற்றி உள்ள தெருக்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோவிலை சுற்றியுள்ள தெருவாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கூட முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர்.
நானும் அவ்வாறே அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது. இது மனித உரிமை மீறல்.
இந்த 48 நாட்களும் தெரு வாசிகள் வெளியே செல்ல முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியவில்லை. இந்த இழப்புக்கு இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தான் காரணம். எனவே எனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.