செய்திகள்
கத்தியால் கேக் வெட்டிய காட்சி

பல்கலைக்கழகத்தில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 6 பேர் மீது வழக்கு

Published On 2019-09-02 10:08 IST   |   Update On 2019-09-02 10:08:00 IST
பல்கலைக்கழகத்தில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் நண்பர்கள் 5 பேருடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வீடியோவில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக காவலாளி ராஜேந்திரன் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பட்டா கத்தியால் கேக் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

அன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து கல்லூரி மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில், பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்வாணன், அவரது நண்பர்களான ரோகித், தீபக், சரவணன், சக்தி, சுஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News