செய்திகள்
கைதான 4 பேர்

பல்லாவரம் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் குட்கா பறிமுதல்-4 பேர் கைது

Published On 2019-08-31 13:53 IST   |   Update On 2019-08-31 13:53:00 IST
பல்லாவரம் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

பல்லாவரம் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து தெற்கு இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நாகல்கேனி பெரியார் நகர் செங்குவேல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று காலை அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கிருந்து 2 டன் குட்கா, சொகுசு கார் மற்றும் ரூ. 2 லட்சத்து 37ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளர்களான ராஜேந்திரன் அவரது மனைவி ராணி, மகன் ராதாகிருஷ்ணன், ஊழியர் விஜயராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் ராஜேந்திரனின் மற்றொரு மகன் மகேந்திரன் பல்லாவரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும் பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து அதை வீட்டில் பதுக்கி வைத்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கார் மூலம் சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தலைமறைவான மகேந்திரனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News