செய்திகள்
மீட்கப்பட்ட கொத்தடிமைகள்.

குன்றத்தூர் அருகே 3 ஆண்டுகளாக மரம் வெட்டும் வேலை செய்த 18 கொத்தடிமைகள் மீட்பு

Published On 2019-08-31 11:50 IST   |   Update On 2019-08-31 11:50:00 IST
குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலத்தில் 3 ஆண்டுகளாக மரம் வெட்டும் வேலை செய்த 18 கொத்தடிமைகளை அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக காண்டிராக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் இந்திரா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் மணி (60). இவர் மரம் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார்.

மரம் வெட்டுவதற்காக வந்தவாசி, மதுராந்தகம் பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குறைவான கூலி கொடுத்து கொத்தடிமைகளாக நடத்துவதாக செல்போன் மூலம் அரசுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா, துணை தாசில்தார் பூபாலன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் விமலா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது காண்டிராக்டர் மணியின் வீட்டின் அருகே கொட்டகை போடப்பட்டிருந்தது. அதில் அதிக அளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அனைவரும் அங்கு கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அங்கு இருந்த 18 பேர் மீட்கப்பட்டனர்.

குமார் (65), சாந்தி (50), சின்னராசு (18), செல்வம் (10), வெங்கடேசன் (22), பச்சையப்பன் (22), ஜெயந்தி (18), ரித்தீஷ் (10) இவர்கள் அனைவரும் வந்தவாசியை அடுத்த காலவிடுகிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் குமார், சாந்தி, சின்னராசு, செல்வம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் மற்றொரு செல்வம் (23), அமுல் (22), வசந்தி (8), முத்து (3), மயிலம் (65), மல்லிகா (55), நாகவல்லி (13), வேதம்மாள் (10), வேங்கப்பன் (12) மற்றும் 10 மாத குழந்தையும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்கள்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடுத்து அழைத்து வந்து மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் கிடையாது. சாப்பாடு மட்டும் வழங்கியுள்ளனர்.

வேலை முடிந்ததும் மணி வீட்டின் அருகேயுள்ள கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு வந்தனர். தப்பிச் செல்லாமல் இருக்க கொட்டகையை சுற்றி அடியாட்களை நிறுத்தி கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது. வந்தவாசி காலவிடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி சினேகா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இவர்களை காண்டிராக்டர் மணி 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட 18 பேரும் சோமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காண்டிராக்டர் மணியிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News