செய்திகள்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் திருட்டுபோன நகையை மீட்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-08-08 15:41 IST   |   Update On 2019-08-08 15:41:00 IST
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள கோவிலில் திருட்டு போன நகையை மீட்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பணால் தெரு பகுதியில் பாளையத்து மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதற்காக கோவிலில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் கதவை திறந்து உள்ளேசென்றனர்.

அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3½ பவுன் நகை மற்றும் கோவிலில் இருந்த வெள்ளி, பித்தளை பொருட்கள் அனைத்தும் கொள்ளைபோய் இருந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து கோவில் பூசாரி கலியமூர்த்தியிடம் கேட்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் கலியமூர்த்தி மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று பலமுறை கேட்டும் போலீசார் சரிவர பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணம்- சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள பாளையத்து மாரியம்மன் கோவிலில் திருட்டுபோன நகை மற்றும் பொருட்களை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும். அப்போது தான் நாங்கள் மறியல் போராட்டததை கைவிட்டு கலைந்து செல்வோம் என கூறினர்.

அதற்கு போலீசார் கூறும்போது, நாங்கள் இந்த பிரச்சனை தொடர்பாக கோவில் பூசாரி கலியமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆனால் தற்போது அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். பாளையத்து மாரியம்மன் கோவிலில் திருட்டுபோன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்படும். எனவே நீங்கள் தற்போது மறியல் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.

இதை ஏற்று பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News