செய்திகள்
ரோட்டோரம் நின்ற இவரை தான் யானை மிதித்து கொன்றது.

யானை மிதித்து வாலிபர் பலி - விடிய விடிய நடந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2019-08-06 14:43 GMT   |   Update On 2019-08-06 14:43 GMT
நால்ரோடு கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் வாலிபரை யானை மிதித்து கொன்ற சம்பவத்தால் பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை பவானிசாகர்- புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் நடந்து சென்றபோது ஒற்றை யானை அப்பெண்ணை தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியது.

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். யானை பெண்ணின் அருகே நின்றுகொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்ச மடைந்தனர். அப்போது ஒற்றை யானை திடீரென பொதுமக்களை துரத்தியதில் அப்பகுதியில் நின்றிருந்த நால்ரோடு கிராமத்தை சேர்ந்த வாலிபர் குமார் (வயது 29) என்பவரை தும்பிக்கையால் கீழே தள்ளி காலால் மிதித்ததில் முகத்தில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விளாமுண்டி வனச்சரகர் அமுல்ராஜ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த ஒற்றையானையை விரட்டியடித்துவிட்டு யானை தாக்கி படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இறந்த குமாரின் உறவினர்கள் மற்றும் நால்ரோடு பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று இரவு 10 மணியளவில் யானை வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க கோரி நால்ரோடு பகுதியில் சத்தியங்கலம்- மேட்டுப்பாளையம்- பவானிசாகர்- புஞ்சை புளியம்பட்டி இணைப்புச் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை மறியல் நள்ளிரவு 11 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது.
Tags:    

Similar News