செய்திகள்
நளினி

போலீசார் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட அனுமதிக்க வேண்டும் - நளினி மனு

Published On 2019-07-31 05:47 GMT   |   Update On 2019-07-31 05:47 GMT
போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட சிரமமாக இருப்பதால், போலீசார் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட அனுமதிக்க வேண்டும் என்று நளினி மனு அளித்துள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட்டு அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.

கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார். இன்று 6-வது நாளாக கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் நளினி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தினமும் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட சிரமமாக உள்ளது. எனவே வீட்டிற்கே போலீசார் வந்து கையெழுத்து பெற்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மகள் திருமணம் குறித்து பேசுவதற்காக ஜெயிலில் உள்ள கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அழகுராணி கூறியதாவது:-

ஜெயிலில் இருந்து பரோலில் வந்த நளினி தினமும் காலை 10 மணிக்கு சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பரோலில் வந்துள்ளார்.

தற்போது போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட கடினமாக உள்ளது. கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை சிறைத்துறையிடம் தான் அளிக்க வேண்டும். ஆனால் அவர் பெறுநர் முகவரியில் மாவட்ட எஸ்.பி. என்று குறிப்பிட்டுள்ளதால் எஸ்.பி.யிடம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி, முருகன் சந்தித்து பேசி வருகின்றனர். தற்போது ஒருமாத பரோலில் வந்த நளினி வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச அனுமதி அளித்து வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் (பொறுப்பு) உத்தரவிட்டார்.

இதையடுத்து வரும் 3-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை நளினி சந்தித்து பேசுகிறார்.

Tags:    

Similar News