செய்திகள்
நடுக்கடலில் தீ வைத்து எரிக்கப்பட்ட படகு.

சிதம்பரம் அருகே நடுக்கடலில் படகுகளுக்கு தீவைப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

Published On 2019-07-29 11:32 IST   |   Update On 2019-07-29 11:32:00 IST
சிதம்பரம் அருகே ஒரு பெரிய பைபர் படகும், 3 சிறிய பைபர் படகுகளும் தீயில் எரிந்தன. படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சின்ன வாய்க்கால், அன்னங்கோயில், முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு உள்பட 28-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மீனவர்களில் சிலர் சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்கக்கோரியும், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை அன்னங்கோயில் மீன் மார்க்கெட்டில் வாங்க கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கடற்கரையோரம் தங்களது படகுகளை வரிசையாக நிறுத்தி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்கு வலைகளை கொண்டு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இதையறிந்த போராட்டக்காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் படகில் நடுக்கடலுக்குள் சென்றனர். அங்கு நின்ற படகில் சுருக்கு வலை இருப்பதை பார்த்தனர். உடனே அதற்கு தீ வைத்தனர். சுருக்கு வலையில் பிடித்த தீ பரவி படகுகளிலும் பிடித்தது.

இதில் ஒரு பெரிய பைபர் படகும், 3 சிறிய பைபர் படகுகளும் தீயில் எரிந்தன. படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு இருதரப்பை சேர்ந்த மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தையொட்டி மீனவ கிராமங்களில் அசம்பாவித சம்பங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News