செய்திகள்
கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே பெண் கொலை- குடிபோதையில் கணவர் வெறிச்செயல்

Published On 2019-07-24 11:43 IST   |   Update On 2019-07-24 11:43:00 IST
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குடிபோதையில் முகத்தில் தலையணையால் அமுக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மாளிகைமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35) கூலிதொழிலாளி. இவருக்கும் சேத்தியாதோப்பு அருகே உள்ள கந்தகுமாரம் பகுதியை சேர்ந்த அமலா (27) என்பவருக்கும் கடந்த 1 ½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. சுரேசுக்கு குடிபழக்கம் இருந்தது. அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று இரவு சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது மனைவி அமலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவி அமலாவின் முகத்தில் தலையணையால் அமுக்கினார். இதில் அமலா மூச்சி திணறி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இன்று காலை சுரேஷ் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வெகுநேரம் ஆகியும் அமலா வெளியில் வராததால். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அமலா பிணமாக கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே மனைவியை கொலை செய்த சுரேஷ் இன்று காலை காட்டுமன்னார் கோவில் போலீஸ்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News