செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி விவசாய கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.

காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-23 08:25 GMT   |   Update On 2019-07-23 08:25 GMT
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

தமிழகத்தில் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் அமல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாகிவிடும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் இன்று பெருந்திரள் பேரணி மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை தபால் நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுநல கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டனர்.

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குலோப், தி.க. மாநில துணை பொது செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்பு காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். உடனே அங்குநின்ற போலீசார் பேரணி செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதைத்தொடர்ந்து விவசாய சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்பு சாலையின் ஓரம் அமைதியாக பேரணி செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் அமைதியாக சாலையின் ஓரத்தில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

அதன்பின்பு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அங்கு நின்ற போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், காவிரிபாதுகாப்பு கூட்டு இயக்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்பு ஒருசிலரை மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதித்தனர்.

Tags:    

Similar News