செய்திகள்
சிறுவனை கடத்திய வாலிபர்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

Published On 2019-07-16 10:08 GMT   |   Update On 2019-07-16 10:08 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களது 3 வயது மகன் சோம்நாத். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் ஒடிசா செல்வதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அதிகாலை ரெயில் என்பதால் இரவே குடும்பத்துடன் வந்து ரெயில் நிலையத்தில் தூங்கினர்.

அதிகாலையில் நீலாவதி எழுந்து பார்த்த போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகன் சோம்நாத் மாயமாகி இருந்தான். அவனை ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து ராம்சிங் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் சிறுவனை வாலிபர் ஒருவர் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. அவர் சிறுவனுடன் கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயிலில் ஏறுவது தெரிந்தது.

இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது கடத்தப்பட்ட சிறுவனுடன் மர்ம வாலிபர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள கிழக்கு பகுதி படிக்கட்டில் நடந்து செல்வது தெரிந்தது.

கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய வீடியோ காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு காப்பகத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை மீட்க ரெயில்வே காவல்துறை விரைந்துள்ளது.
Tags:    

Similar News