செய்திகள்
ரெயிலில் இருந்து விழுந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்ற காட்சி.

ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்

Published On 2019-07-14 11:24 GMT   |   Update On 2019-07-14 11:24 GMT
ஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் தூக்கு கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆம்பூர்:

பெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த அவர் நேற்று இரவு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் அருகே இரவு 12.30 மணிக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி கழிவறைக்கு செல்ல எழுந்தார். தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரெயிலில் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை கதவு என நினைத்து வாசல் கதவை திறந்துவிட்டார்.

இதில் கால் தடுமாறிய அவர் வாசலில் இருந்து தவறி கீழே விழுந்தார். முதுகு, கால்களில் படுகாயம் அடைந்த அவர் தண்டவாளத்தின் அருகில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். காப்பாற்றுமாறு கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உமாதேவி படுகாயமடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சு மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் வந்தனர். உமாதேவியை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உமாதேவி அதிகம் நகை அணிந்திருந்தார். நள்ளிரவு 12.30 மணிமுதல் காலை வரை தண்டவாளத்தின் அருகில் கிடந்தாலும் அவரது நகை பத்திரமாக இருந்தன.

காயமடைந்து மயங்கி கிடந்த பெண்ணை நகைகளுடன் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த பொதுமக்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News