செய்திகள்
வேகன்கள்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது

Published On 2019-07-11 07:06 GMT   |   Update On 2019-07-11 07:06 GMT
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது.
வேலூர்:

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது.

இதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை மெட்ரோ மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் 3 கட்டமாக ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டனர். அங்கிருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை வழியாக பார்சம்பேட்டை ரெயில்வே உயர்நிலை பள்ளி பின்புறம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரம் புதிதாக பைப்லைன் அமைக்க தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீர் வேகன்களில் சென்னைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கான பணிகள் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி இரவு பகலாக நடந்தது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 ரெயில்வே வேகன்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது.

இந்த வேகன்கள் சுத்தம் செய்யப்பட்டு பலத்த ஆய்வுக்கு பின்னர் குடிநீர் கொண்டு செல்ல தகுதியாக்கப்பட்டு ஒவ்வொரு வேகனிலும் “வாட்டர் டேங்க்” என எழுதப்பட்டுள்ளது.



மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை, பார்சம்பேட்டை ரெயில்வே கேட் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று மதியம் சோதனை ஓட்டம் நடந்தது.

அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் உடனே நிறுத்தப்பட்டது. கசிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 2 மணிநேரம் போராடி சீர் செய்தனர்.

இதையடுத்து தண்ணீர் ஏற்றி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது கசிவு இல்லாமல் தண்ணீர் சென்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ரெயில்வே வேகன்களில் தண்ணீர் நிரப்புவதற்கான இரும்பு பைப் அமைக்கும் பணிகள் நேற்று இரவு 11 மணிக்கு முடிவடைந்தது.

இதற்காக யார்டின் அருகே 660 மீட்டருக்கு மெகா சைஸ் இரும்பு பைப் நிலத்தில் இருந்து 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து சிறிய அளவில் இரும்பாலான கன்ட்ரோலர் வால்வு 50 பொருத்தியுள்ளனர். அதிலிருந்து 5 இன்ச் பிளக்சிபில் (வளையும் தன்மை) பைப்பை 25 அடி நீளத்துக்கு பொருத்தி ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.

நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடந்தது. இப்பணியில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர்.

அதனை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள் ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர். இதையடுத்து 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

50 வேகன்களிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றி சென்னைக்கு புறப்பட தயாராக உள்ளது. பார்சம்பேட்டை 4-வது யார்டில் தண்ணீர் ஏற்றப்பட்ட ரெயில் நிற்கிறது.

ஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீரை 3¼ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.

ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்பப்படும் நேரத்தில் ரெயில் என்ஜினை இயக்கும் 25 ஆயிரம் மெகாவாட் மின்கம்பியின் இணைப்பு துண்டிக்கப்படும். வேகன்களில் குடிநீர் நிரப்பிய பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்படும்.

தினமும் 4 முறை ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்புவதால் அந்த நேரத்தில் மட்டும் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும், இதனால் மற்ற ரெயில் பாதைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

50 வேகன்களில் 1 முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று மொத்தம் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு ஒரு தடவைக்கு ரூ.8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

50 ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்படும். இதற்காக குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் 4-வது யார்டில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் 6 மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News