செய்திகள்
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வடமாநில வாலிபர்.

ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலையா?

Published On 2019-07-10 17:25 GMT   |   Update On 2019-07-10 17:25 GMT
ஈரோட்டில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

ஈரோடு:

ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களில் சிலர் திருட்டு வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்புகூட ஈரோடு வந்த அரசுபஸ்சில் ரூ.3½லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டையை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதாப்மாஜி, பரஸ்தீன்ஜனப், அனில்மயூரா, சரத்மாஜி உள்பட 5  பேரை கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இதற்கிடையே ஈரோடு நசியனூர்ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு நேற்று 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.

கடைக்கு வந்த அவருக்கும் கடைக்காரருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அந்த வடமாநில வாலிபர் அருகில் உள்ள மற்றொரு கடைக்கு சென்றார். அந்த கடைக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டார்.

இதை கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வடமாநில வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில்அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக் கப்பட்டு உள்ளது.

இறந்த வடமாநில வாலிபர் பெயர் விவரம் தெரிய வில்லை. போதையில் ரகளை செய்ததால் அவரை சிலர் தாக்கியதில் அவர் இறந்திருக்ககூடும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “வடமாசில வாலிபர் இப்போதைக்கு மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் இன்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார்? என தெரியவரும் இதனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்“ என்று கூறினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News