செய்திகள்
காஞ்சிபுரத்தில் இன்று அத்திவரதர் மாம்பழ வண்ண பட்டாடை உடுத்தி மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் இதுவரை 7 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2019-07-09 05:25 GMT   |   Update On 2019-07-09 05:25 GMT
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

தினந்தோறும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.



நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்கள். இன்று காலை அத்திவரதரை சவுமியா அன்புமணி வழிபட்டார்.

விழாவின் 9-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பல வண்ண பட்டாடை மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து வழிகளிலும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் அதிக அளவு வருவதால் நகர்புறத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில் காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து நகராட்சி ஊழியர்கள் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வரும் சாலைகள் அனைத்தையும் தொடர்ந்து சுத்தப்படுத்தியும், சுகாதரக்கேடு ஏற்படாமல் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என பல்வேறு பகுதிகளிலும் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள். அவர்களின் பணியினை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

காஞ்சிபுரத்துக்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுவதால் காந்தி சாலை ரங்கசாமி குளம் பகுதியில் இருந்து பெருமாள் கோயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பக்தர்கள் நடந்து வரும் நிலை உள்ளது.

வெயிலில் கால் சுடாமல் நடந்து செல்ல வசதியாக சாலையில் நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.
Tags:    

Similar News