செய்திகள்

பெண்ணாடம் அருகே குடிநீர் கிடைக்காமல் பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டம்

Published On 2019-06-19 04:49 GMT   |   Update On 2019-06-19 04:49 GMT
பெண்ணாடம் அருகே குடிநீர் கிடைக்காமல் பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.கொல்லதங்ககுறிச்சி.இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஊராட்சிநிர்வாகம் சார்பாக ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை பெய்யாததாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.

இதன்காரணமாக அப்பகுதிமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படமுடியவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெண்கள் கடும் அவதியடைந்தனர்.

அவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்வெளிகளில் உள்ள கிணற்றில் தண்ணீரை எடுத்து வந்தனர்.

கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டதால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டனர். பின்பு அங்குள்ள சாலையோரம் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News