உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்- சீமான் பேச்சு
நெல்லை:
நாம் தமிழர் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று இரவு மே18 வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தமிழர்களின் வரலாறு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். 13 கோடி தமிழர்கள் இருந்தபோதிலும் தங்களது உரிமையை பெற்று வாழ முடியவில்லை. தமிழ்ஈழ விடுதலையை இன்று வரை விமர்சிக்கிறார்கள். கல்லில் இருக்கும் தெய்வங்களை வழிபடுவது தவறு என்று கூறியவர்கள் இன்று நம்மை அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
நமது பழம் பெருமையை பேசுவது தவறல்ல. படிப்பினை, வரலாற்றை படிக்காதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே புறநானூற்று தமிழனை பார்த்து வீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.
காசு இருக்கும் இடத்தில் கூடாதீர்கள். கொள்கை இருக்கும் இடத்தில் கூடுங்கள். நாங்கள் தோற்றாலும் வீரர்கள். நீங்கள் ஜெயித்தாலும் வீழ்ந்தவர்கள். பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்களில் இருந்து நமது தாய்மொழியை வெளியேற்றினார்கள். இன்று இந்திமொழியை திணிக்கப் பார்க்கிறார்கள். நாம் வீரவேகத்துடன் பேசுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவி வருகிறது. இது நடக்குமா என்று அவர்கள் பேசுவது ‘வெட்டிப்பேச்சு’. ஆனால் நாங்கள் பேசுவது வெற்றி பேச்சு.
இன்னும் அதிகபட்சம் அவர்கள் 7 ஆண்டுகள் ஆள்வார்கள். அதன் பிறகு நாங்கள் அறியணையில் அமர்வோம். புரட்சி என்பது மேல் இருப்பது கீழ் வரும். கீழே இருப்பது மேல் வரும். நாங்கள் புரட்சிகர போராட்டத்தை முன் எடுத்துள்ளோம்.
தேர்தல்தான் முடிந்துள்ளது. தேடல்கள் முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம்.
தி.மு.க. தமிழர்களை காக்க தவறிவிட்டது. தமிழ்தேசம் உருவாக்கிய பிரபாகரனை திராவிட திருவாளர்களே தோற்கடிக்க காரணமாக இருந்தார்கள்.
தமிழகத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு திராவிட கட்சிகளே அனுமதி கொடுத்தன. எனவே அவர்களை புறந்தள்ளி விட்டு தமிழர்களுக்கான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 17 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். தூய கட்சியை, நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவை காரணம் காட்டி நம்மை வீழ்த்தி விட்டார்கள். மத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியே பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அதை அவர்கள் கட்டி விட்டால் அவர்களது அரசியல் முடிந்து விடும். இந்த 5 ஆண்டில் ராமர்கோவில் கட்டாவிடில் நாங்களே மோசடி வழக்கு போடுவோம்.
திராவிடத்துக்குள் தமிழர்கள் அடங்கி இருக்க முடியாது. தமிழர்களுக்கு என்று தனித்துவம் உண்டு. இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்பே தமிழர்கள் தனி கொடியுடன் ஆட்சி நடத்தியவர்கள். இனி எங்களுக்கான வரலாற்றை நாங்களே படைப்போம். இந்த நேரத்தில் நாம் தமிழர் படை திரண்டு விட்டது. ஓட்டுக்கு காசு வாங்குவது அவமானம் என்ற காலம் வரும். அப்போது இந்த படை உறுதியாக வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.