செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களிடம் சிபிஐ விசாரணை

Published On 2019-05-13 05:18 GMT   |   Update On 2019-05-13 05:18 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று சென்று உள்ளனர்.

அந்த பட்டியலில் நோயாளிகளின் பெயர், முகவரி, சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா? தற்கொலை செய்து உள்ளார்களா? அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா ? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு செல்போன்கள் வாங்கிய கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் பெற்றவர்களுக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

எனவே இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.
Tags:    

Similar News