செய்திகள்
தேர்தல் பிரசார கூட்டத்தில் கே.எஸ். அழகிரி பேசினார்.

தேர்தல் முடிவுக்குபின் அதிமுக பல அணிகளாக சிதறும்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-05-06 13:53 IST   |   Update On 2019-05-06 13:53:00 IST
தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து சிதறி விடும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

பிரதமர் மோடி இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். நீட் தேர்வு ரத்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், மாநில பட்டியலில் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளது.

மோடியின் நடவடிக்கையால் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்டவைகள் அழிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சி 5 ஆண்டுகள் பின்னால் சென்று விட்டது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல.

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே சமயத்தில் தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து சிதறி விடும். அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் அவர்கள் கூட்டணி. ஆனால் நமது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News