செய்திகள்

சூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

Published On 2019-05-04 11:26 IST   |   Update On 2019-05-04 11:26:00 IST
சூலூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். #MKStalin #SulurConstituency
கோவை:

சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஒட்டப்பிடாரத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க. ஸ்டாலின் இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

மு.க. ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அவர் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். மாலை 5 மணிக்கு தென்னம் பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும் வேனில் நின்றவாறு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் கோவையில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்

நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார். #MKStalin #SulurConstituency

Similar News