செய்திகள்
மூட்டைகளை சுமந்து வேனில் ஏற்றிய மன்சூர்அலிகான்

மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த மன்சூர்அலிகான்

Published On 2019-04-16 06:27 GMT   |   Update On 2019-04-16 06:27 GMT
நிலக்கோட்டை மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தொழிலாளர்களிடம் மன்சூர்அலிகான் வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக நெருங்கி பழகி வாக்குசேகரித்தார்.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த நடிகர் மன்சூர்அலிகான் அங்கு குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களிடம் தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வருகிறது என கேட்டார்.

உப்பு தண்ணீரைத்தான் நாங்கள் இப்போது பிடித்து செல்கிறோம். நல்ல தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். மஞ்சளாறு அணையில் இருந்து வரும் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை என்றனர். பிறகு எதற்காக குடிநீர் வரி கட்டுகிறீர்கள் என கேட்டார்.

அதனைத் தொடர்ந்து சாலையோரம் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் சென்று தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் இட்லி தருமாறு கேட்டு திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டார். அதன்பின் அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் சென்று முருங்கைக்காய், மா, வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலையை கேட்டறிந்து இது உங்களுக்கு லாபம் தரும் வகையில் உள்ளதா? என கேட்டார். எனக்கு வாக்களித்தால் விவசாயிகளின் விலை பொருளுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மூட்டைகளை தூக்கி வேன்களில் ஏற்றி உதவி செய்தார்.

நான் திரைப்படங்களில் மட்டுமே வில்லனாக நடிப்பேன். இதனால் பார்க்கும் பலருக்கும் வில்லனாகவே எண்ணத்தோன்றும். நிஜ வாழ்க்கையில் காமெடி கலந்த சராசரி மனிதன்தான். விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு உணர்ந்தவன். எனவே என்னைப்போன்ற நபருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என வாக்கு கேட்டு சென்றார்.  #LokSabhaElections2019 #MansoorAliKhan

Tags:    

Similar News