செய்திகள்

திண்டுக்கல்லில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்வு

Published On 2019-04-07 13:31 GMT   |   Update On 2019-04-07 13:31 GMT
திண்டுக்கல்லில் எலுமிச்சை வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யம்பாளையம், சிறுமலை, வெள்ளோடு, கொடைக் கானல் கீழ்மலை பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விளைவிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எலுமிச்சையின் தரத்தால் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக எலுமிச்சை விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் இல்லாததால் குறைந்த அளவே எலுமிச்சைகள் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட சிப்பம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.6 ஆயிரம் வரை விலை கேட்கப்படுகிறது. சில்லரையாக ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

Tags:    

Similar News