செய்திகள்

மோடியை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை- கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2019-04-06 12:00 GMT   |   Update On 2019-04-06 12:00 GMT
பிரதமர் மோடியை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #pmmodi

தென்திருப்பேரை:

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் ஆழ்வார்திருநகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலானது மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல், பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தல். சரக்கு, சேவை வரி விதித்ததாலும், உயர் பணமதிப்பு இழப்பு செய்ததாலும், சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பா.ஜனதா அரசு, ஏற்கனவே வேலை செய்தவர்களின் வேலையையும் பறிக்கின்ற நிலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையே பா.ஜனதா சார்பில் ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தி உள்ளது. அந்த ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடியபோது, அவர்களிடம் முதல்-அமைச்சரோ, அமைச்சரோ, அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ சென்று பேசவில்லை. 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றனர்.

1,000 பேரை காப்பாற்றுவதற்கு 13 பேரை கொல்வதில் தவறில்லை என்ற பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்தான் தற்போது இங்கு பா.ஜனதா வேட்பாளராக உள்ளார். மண்ணையும், மக்களையும் நேசித்தவர்களை சுட்டு கொல்வதில் தவறில்லையாம். பா.ஜனதா வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வதுதான், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக அமையும். வட மாநிலங்களில் மத கலவரங்களை ஏற்படுத்தி, மக்களை பிரித்தாளக்கூடிய தந்திரங்களை பா.ஜனதா அரசு செய்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தையே பா.ஜனதா அரசு செய்து வந்துள்ளது. தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோதும் வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தலுக்கு முன்னதாக 3 முறை வந்து விட்டார். இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.

அதேபோன்று பா.ஜனதா அரசின் எடுபிடியாக கைப்பாவையாக செயல்படும் அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட பிரதமராக ராகுல்காந்தி விரைவில் வர உள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். அப்போது தமிழகத்தின் அனைத்து உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். நான் என்றும் உங்களுடனே வாழ்ந்து உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #pmmodi

Tags:    

Similar News