செய்திகள்
ராகுல் பிரதமரானால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும்- செந்தில்பாலாஜி பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமரானால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் என்று ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜியுடன் சென்று வாங்கல், குப்புச்சிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:-
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாயத்துக்கு தனிபட் ஜெட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை பிரதமராக போகும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஏற்றுக் கொண்டு தேர்தல் வாக்குறுதியாக நமக்கு தந்துள்ளார்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 72 ஆயிரம் வழங்கும் உன்னத திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராகுல் பிரதமரானால் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கும். கரூர் பாராளுமன்ற தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் மு.தம்பித்துரை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அவர் கொண்டு வந்த திட்டங்களை பற்றி விவாதிக்க தயாரா? நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களின் (மக்களின்) எதிர் காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் சிந்தித்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி, தி.முக. ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் பூவை ரமேஷ்பாபு மற்றும் திரளான கட்சியினர் உடனிருந்தனர்.