செய்திகள்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங். வேட்பாளரை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2019-03-25 05:43 GMT   |   Update On 2019-03-25 05:43 GMT
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
விருதுநகர்:

விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாராளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி வலிமையான, எளிமையான, தூய்மையான பிரதமர். பயங்கரவாதத்தை வேரறுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மன்மோகன்சிங் ஆட்சியின்போது மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணியாக இருந்தது. எதிர்க்கட்சியே இல்லாத நிலையை இந்த கூட்டணி உருவாக்கியது. இந்த கூட்டணி தொடர வேண்டும்.

விஜயகாந்த் தேசப்பற்று மிக்கவர். அவருடைய படத்தில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரை போல அவரும் சாமானிய வேட்பாளரைத்தான் விருதுநகர் தொகுதிக்கு அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்தாகூர் போட்டியிடுகிறார். அவர் பணக்காரர். சாமானியர்கள் சாம்ராஜ்யத்தை சரித்ததாக வரலாறு உண்டு.

எளிமையான அழகர் சாமி இந்த தேர்தலில் மாணிக் தாகூரை தோற்கடிப்பார். மாணிக்தாகூர் இங்கு ஏன் போட்டியிடுகிறார்? உ.பி.யில் போய் நிற்க வேண்டியதுதானே. மாணிக் தாகூரை காங்கிரஸ்காரர்களே தோற்கடித்து விடுவார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் கந்துவட்டிக்காரர். ஓட்டுக்கு பணம் கொடுப்பார். தேர்தலில் தோற்றுவிட்டால் மீண்டும் வாக்காளர்கள் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை கேட்பார். அந்த பணத்தை வட்டி போட்டு வசூலிப்பார்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

மாணிக்தாகூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் வடமாநில பெயர் போல இருப்பதால் உ.பி.க்கு செல்ல வேண்டியதுதானே என்று அமைச்சர் பேசியுள்ளார். வேட்பாளரை அமைச்சர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
Tags:    

Similar News