செய்திகள்

பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க முடியாது- பி.ஆர்.பாண்டியன் பேச்சு

Published On 2019-03-08 10:16 GMT   |   Update On 2019-03-08 10:16 GMT
மத்திய அரசு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க முடியாது என்று பி.ஆர்.பாண்டியன் பேசினார். #prpandian #centralgovernment #tnfarmers

சீர்காழி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்தப்படும் ‘பாராளுமன்ற தேர்தல் 2019 பிரச்சனைகளும், தீர்வுகளும் - விவசாயிகள் சந்திப்பு என்ற தமிழகம் தழுவிய பரப்புரை பிரச்சார பயணத்தை கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டம் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் நேற்று மாலை நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பி.ஆர்.பாண்டியன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் 47 வருவாய் கிராமங்களில் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை அபகரித்து பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைத்தால் மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாறி வரும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதியை மத்திய மோடி அரசு வழங்கி விட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். தமிழக முதல்வர் பிரதமரிடம் மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி பேசவில்லை.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட் டம் நடத்தியும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

கஜா புயலின் போது 1 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு இன்னும் நிவாரணம் வழங்க வில்லை. இதே போல் வர்தா, தானே புயல் இழப்பிற்கும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலை மையமாக வைத்து 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் பேராபத்து ஏற்படும். மத்திய அரசு 18 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது தகுதியானவர்கள் ஒரு கோடி பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.25 லட்சம் பேர் ரூ.2000 வாங்க தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 16 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.

விவசாயிகளின் 46 கோரிக்கைகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து செயல்படுவோம். பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க முடியாது. அவ்வாறு நினைத்தால் விவசாயிகள் திருப்பி அடிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #prpandian #centralgovernment #tnfarmers

Tags:    

Similar News