செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுக வெற்றி பெற முடியாது- தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

Published On 2019-03-02 04:46 GMT   |   Update On 2019-03-02 04:46 GMT
இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தாலும் ஆர்.கே.நகரை போல தோல்விதான் கிடைக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். #thangatamilselvan #admkleaf

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல்களில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளன. ஆனால் ஜெயலலிதாதான் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து 40 தொகுதியிலும் போட்டியிட்டு 37 தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதேபோல் இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், மாநில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க., பா.ஜ.க. மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. இதனால் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். அதேபோல் ஸ்டாலினுக்கு கட்சியை நடத்தும் திறமை இல்லை. இந்த தேர்தலில் தி.மு.க.வும் தோல்வியை சந்திக்கும். 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறும். அப்போது நாம் சொல்பவர்தான் பிரதமர் ஆவார். அப்போதுதான் மாநில உரிமைகளான கச்சத்தீவு மீட்கப்படும்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப்பின்னர் தலைவர் பதவிக்கு வெற்றிடம் உள்ளது. அதற்கு தகுதியானவர் டி.டி.வி.தினகரன் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து பாராளுமன்ற தேர்தலை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு, தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும். குக்கர் மட்டுமல்ல எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அமோக வெற்றி பெறும். மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தாலும் ஆர்.கே.நகரை போல தோல்விதான் கிடைக்கும்’’ என்றார். #thangatamilselvan #admkleaf

Tags:    

Similar News