செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

40 தொகுதிகளிலும் வேறு சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்

Published On 2019-03-01 12:01 IST   |   Update On 2019-03-01 15:09:00 IST
குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் 40 தொகுதிகளிலும் வேறு சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று டி.டி.வி.தினகரன் பேசினார். #AMMK #TTVDhinakaran
நெல்லிக்குப்பம்:

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை 4-வது நாளாக நெல்லிக்குப்பம் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.

முன்னதாக அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் முன்பு டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

இன்று இரட்டை இலை சின்னம் எனக்கு மறுக்கப்பட்டு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. இது உங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் துரோகிகள் கையில் சிக்கிய சின்னமாக அது உள்ளது. இதனால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை மக்களே தோற்கடித்தார்கள். குக்கர் சின்னம் வெற்றி பெற்றது.

இதனை விட பெரிய அங்கீகாரம் நமக்கு தேவையில்லை. நீதிமன்றத்தில் நான் குக்கர் சின்னம் மட்டுமே கேட்டேன். இதற்கு காரணம் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று நாம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் போராடி வருகிறோம்.

தமிழகம் மற்றும் புதுவையில் வேறு யாருக்கும் குக்கர் சின்னம் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து நமது உரிமையை மீட்டு எடுப்போம். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் குறித்த நேரத்தில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இதனால் குக்கர் சின்னம் நமக்கு வழங்க வேண்டும். நாம் உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக குக்கர் சின்னத்தை பெறுவோம். தமிழகம் முழுவதும் குக்கர் சின்னம் பட்டிதொட்டியெல்லாம் தெரிந்து வெற்றி சின்னமாக உள்ளது.

சின்னம் ஒரு பிரச்சனை இல்லை. ஏனென்றால் பழக்கப்பட்ட சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் ஆர்கேநகர் தேர்தலில் 70 ஆண்டு உள்ள உதயசூரியன் சின்னம் டெபாசிட் இழந்தது. இரட்டை இலை சின்னம் அந்த தொகுதியில் இரண்டு முறை ஜெயலலிதாவை வெற்றி பெற செய்தது. இது மக்களுக்கு தெரியாதா? அதனால்தான் சின்னம் என்பது முக்கியமல்ல அது யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஆகையால் குக்கர் சின்னம் 100 சதவீதம் எங்களுக்கு கிடைக்கும். உச்சநீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் 40 தொகுதியிலும் 40 சின்னத்தில் நின்றாலும் கண்டிப்பாக மக்கள் தெரிந்து கொண்டு வெற்றி பெற செய்வார்கள்.

மக்களை பற்றி கவலைப்படாமல் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வுக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

தமிழகம் தலை நிமிரவும், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #AMMK #TTVDhinakaran

Similar News